அருள்மிகு தலையூர் பெரியநாயகி அம்மன்

நஞ்சைதலையூர் (மூலனூர் வட்டம்)

Home Thala Varalaru Gallery Trust Contact

ஸ்தல வரலாறு

தலையூர் பெரிய நாயகி அம்மன் திருக்கோவில் ஸ்தல வரலாறும் அமைப்பும்

இத்திருக்கோவில் கரூரிலிருந்து தாராபுரம் செல்லும் வழியில் சின்னதாராபுரத்திலிருந்து வடமேற்க்கே ஏழாவது கீ.மீ தொலைவில் திருப்பூர் மாவட்டம் நஞ்சைத் தலையூர் அமைந்துள்ளது.

தலையூர் காளி மன்னர் கோலோச்சி திருப்பணி செய்து வணங்கிப் பெருமைப்பட்ட திருத்தலம் இது. “வெட்ட வெட்ட தலையும் வேட்டுவர் குலம்” என்று ஆசீர்வதித்து நம் குலம் காக்கும் காளிதேவி – (பெரிய நாயகி அம்மன்) அருள்பாலித்து வரும் திருக்கோவில் இது. அமராவதி ஆற்றின் தென் கரையில் கம்பீரமாக காட்சி தரும் இத்திருக்கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. நதி தீரத்தில் அமைந்துள்ள இத்திருக்கோவில் இன்றும் வலிவும், பொலிவும், சக்தி மிக்கதாகவும் திகழ்கின்றது.

தலையூர் காளி மன்னர் வாழ்ந்து செழித்திருந்த அரண்மனை இருந்த இடம் இன்று வயலாகக் காட்சியளிக்கின்றது வடக்கு நோக்கியுள்ள இத் திருக்கோவில் காளி மன்னர் காலத்திற்குப்பின் அவரது பரம்பரையினரால் புதுப்பிக்கப்பட்டு நாயக்கர் மரபுக் கட்டிட அமைப்பில் சிலைகள் பெரியதாகவும் நாயக்கர் மரபிலும் காட்சியளிக்கின்றன. நெற்றிக்கல்லில் நாயக்கர் மரபு மகாலக்ஷ்மி (கஜலக்ஷ்மி) சின்னம் காட்சி தருகிறது.

இங்கு காரியகாளியம்மன் (கொங்கலம்மன்) கன்னிமாரப்பன் சிவன் கோவில் மற்றும் பெருமாள் கோவில்களும் அமைந்துள்ளன. இவையனைத்துமே காளி மன்னரும் அவருக்குப்பின் வந்த வாரிசுகளும் வழிபட்ட தலங்களாகும்.

பெரிய நாயகிஅம்மன் திருக்கோவிலுக்கு தெற்க்கே வயலில் அமைந்துள்ள பிள்ளையார் கோவில் இத்திருக்கோவிலைச் சேர்ந்தது. அச்சிலை சற்று சாய்வாகவும், முதுகில் பூணூல் போன்ற அமைப்பும் சங்கு போன்ற தோற்றமும் கொண்ட மிகவும் அபூர்வமான மற்றும் அற்புதமான அமைப்பை கொண்டுள்ளது. இப்போதும் இப்பிள்ளையார் கோவிலில் அபிஷேக ஆராதனைகள் செய்த பிறகே பெரிய நாயகிஅம்மன் திருக்கோவிலில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

நம் வேட்டுவக் கவுண்டர் சமுதாயத்தின் அடையாளமாக விளங்கும் இத்திருக்கோவில் ஒரு புனித ஸ்தலமாகும். வரலாறு போற்றும் வீரம் விளைந்த நிலம் ஆகும். இத் திருக்கோவில் திருப்பணி செய்யப்பட்டு சீரிய முறையில் வழிபட்டு வந்தால் நம் சமுதாயம் செழித்து இன்றும் என்றும் மக்கட்பேறு, மங்காத செல்வம் மற்றும் புகழுடன் வாழ்வாங்கு வாழ்வர்.